Powered By Blogger

Tuesday, December 30, 2014

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம்.

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் தரும்.

மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ’முக்கோடி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. முரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார்.

பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச்சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்றுவித்தார். அவள் ஒரு ஹூங்காரம் செய்ததில் முரன் எரிந்து சாம்பலானான்.

முரனை எரித்த மோகினிக்கு ’ஏகாதசி’ என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளின் பெயர்களையும் அவற்றை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் புராணங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன. சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி ’பாபமோஹினி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ’காமதா’ என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தினங்களில் விரதமிருப்பவர்களுக்கு விரும்பிய பேறுகள் கிட்டும். வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி ’வருதினி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ’மோகினி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த தினங்களில் விரதம் அனுஷ்டிப்பவர், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைப் பெறுவர்.

ஆனி மாதத்தில் வரும் ’அபரா’, ’நிர்ஜலா’ ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர். ஆடி மாதத்து ’யோகினி’, ’சயன’ ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், அன்னதான பலனைப் பெறுவர். ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான ’காமிகை’யிலும் தேய்பிறை ஏகாதசியான ’புத்திரதா’விலும் விரதமிருப்போருக்கு மக்கட்பேறு கிட்டும். புரட்டாசி மாத ஏகாதசிகள் ’அஜா’, ’பரிவர்த்தினி’ எனப்படுகின்றன.

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ’இந்திரா’, தேய்பிறை ஏகாதசி ’பராங்குசா’ என அழைக்கப்படுகின்றன. கார்த்திகை மாத ஏகாதசிகள் ’ரமா’, “பிரமோதினி’. மார்கழி மாத ஏகாதசி ’வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும்.

இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ’உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது. தை மாத ஏகாதசிகள் ’சுபலா’, ’புத்ரதா’ எனப்படுகின்றன. பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றைச் செய்யாமல் சாபத்துக்கு ஆளானவர்கள், புத்ரதா விரதம் அனுஷ்டித்தால், பித்ருசாபம் நீங்கி நலம் பெறுவர்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசியான ’ஜெயா’வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர். தேய்பிறை ஏகாதசியான ’ஷட்திலா’ தினத்தில் விரதம் அனுஷ் டிப்பவர்கள் பிரம்மஹத்தி தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கி நலம் அடைவர். பங்குனி மாத ஏகாதசிகள் ’விஜயா’, “விமலகி’ எனப்படுகின்றன.

ராமபிரான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லும்முன், விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டித்தார் என்பது புராண வரலாறு. தசமியிலும், துவாதசியிலும் ஒரு வேளை உணவு உண்டு, அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடமைகளை முடித்து, அதன் பிறகு முறைப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

அன்று முழுவதும் உணவு கொள்ளாமல் இருப்பது சிறப்பானது. இயலாதவர்கள் நிவேதனம் செய்த பழங்களை சிறிதளவு உண்ணலாம். பகலிலும் அன்று உறங்காமல் பரந்தாமனை பஜனை, நாமஸ்மரணை செய்தும், வழிபாட்டுப் பாடல்களைப் பாராயணம் செய்தும் வழிபட வேண்டும். அடுத்த நாள் துவாதசியன்று அடியார்களுக்கு உணவளித்து அதன் பின்பே உண்ண வேண்டும்.

அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றனர்.

Tuesday, September 16, 2014

முதல் மனைவியை நேசியுங்கள்!

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
 எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்,

Friday, January 24, 2014


குத்து விளக்கு



இந்து தர்மத்தில் கூறப்பட்டது போல் குத்து விளக்கை சரியான திசையில் ஏற்றுவதால் அதிகமான பலன்கள் கிடைக்கும்.
கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கும் மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம் பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் திருமணங்கள் போன்ற சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் அதிகரிக்கும்.
தெற்கு முகமாக ஏற்றினால்  கெடுதி,குடும்பத்தில் குழப்பம்,அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
விளக்கின் மகிமை
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.
விளக்கேற்றும் முகத்தின் பலன்                                                                             குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்    -       மத்திமபலன்
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்    -       குடும்ப ஒற்றுமை
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்    -       புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் -      பசு, பால், பூமி, சேர்க்கை
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால்   -     பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.
குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. மலர்களால் அணைக்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
தெரிந்து கொண்டால் மாத்திரம் போதாது கடைப்பிடியுங்கள் அப்பொழுதுதான் பலன் கிடைக்கும்.

Pages